சுரேஷ் பரதனின் ‘ஊர் நடுவே ஒரு வனதேவதை’ கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

நெடுஞ்சாலை எங்கும் நிறைந்திருக்கும் புங்கை மரம் போல்,  இந்த கவிதை தொகுப்பெங்கும் நிறைந்திருப்பது காதலே! நீங்கள் ஒரு நதிக்கரையினில் (ஒரு ஆறோடும் ஊரில்) வளர்ந்திருந்தாலோ  அல்லது ஒரு காதல் செய்திருந்தாலோ இந்த புத்தகம் ஒரு காலபுறாவாக மாறி உங்கள்  கடந்த காலத்தைப் பறித்து வந்து  உங்கள் உள்ளங்கையில் போட்டுவிட்டுப் போகும்.

மரவெட்டி ஒருவனைக் காதல் மணம்புரிந்து ஊருக்குள் குடியேறும் வனதேவதை ஒருத்தியின் காடு குறித்த நினைவுகளையும், அவள் காதல்கணவ‌னால் வெட்டப்படும் மரங்கள் நினைத்து அவள் கொள்ளும் பெருந்துயரத்தையும் ஒருங்கே பேசும் ஊர் ந‌டுவே ஒரு வனதேவதை‘ என்னும் கவிதை ந‌ம் சிந்தனைகளை அழப்படுத்தும். வாழ்வின் முரண்களுக்குள் சிக்குண்டு பரிதவிக்கும் உயிர்களின் மௌன கதறலை நம் செவி அடையச் செய்யும்.

பூவரச மரத்தோடு சேர்ந்தே வளரும் அவளுக்கும், அம்மரத்துக்கும் இடையிலான சிநேகம் பேசும் ‘அவளும் பூவரசும்‘ கவிதை, எனக்கு என் ஊஞ்சல் நாட்களை கண்முன் கொண்டு வந்தது.  ‘டெடி பியர்’ பொம்மை, ‘மைக்ரோ டிப்’ பென்சில் என எந்த பொருள் கேட்டு பிடிவாதம் பிடிப்பதானாலும் சரி ஊஞ்சலில் தான் படுத்துக்கொண்டு அழுவேன். ஊஞ்சல் மேல் ஏறி நின்று கொண்டு அதன் கம்பிகளை பிடித்தபடியே “தஞ்சாவூர்,  திருச்சி, மதுரை” என கூவியபடி, நான் நடத்துனராகும் போது அது பேருந்து ஆக உருமாறி எங்களோடு குதூகலிக்கும்.  துயில் நெருங்காத நீள் இரவுகளை நாங்கள் ஆடியே தீர்த்திருக்கிறோம். கம்பிகளிலிருந்து வரும் க்ரீச் ஒலியும், காற்றின் வேகமெழுப்பும்  ‘ஸ்’ ஒலியும் தான் எங்கள் பரிபாஷை. பலமுறை என் கண்ணீர் உலர்த்தி,  ஒரு தகப்பனை போல அயராது என்னை நெஞ்சில் சுமந்திருக்கிறது. திருமணத்திற்கு முந்திய ஒரு மழை நாளில் “சிநேகிதனே” பாடல் செவி நிரப்ப‌ அதி வேகமாக வெகு நேரம் ஆடிக்கொண்டிருந்தேன் அது தான் எங்கள் இருவருக்குமான கடைசி அன்பு பகிர்தல். அதன் பின் பல்வேறு காரணங்களுக்காகப் பரண் ஏற்றப்பட்ட ஊஞ்சல் இன்றுவரை  இறக்கப்படவில்லை.

ஒரே வெய்யில் தான், அது மனிதர்களுக்கு மனிதர், அவர்கள் செய்யும் பணிகளுக்கேற்ப, கையிருப்புக்கு தகுந்தாற் போல் எப்படி வண்ணமாகிறது என்பதை இயல் மனிதர்கள் மூலம் பேசும்  ‘வெய்யிலின் ருசி‘ என்னும் இக்கவிதை நடைமுறை தாகத்தைச் சொல்கிறது.

எனக்கு மிகப் பிடித்த கவிதைகளில் ஒன்று, ‘ஒரு பின் மதியத் தெரு‘. இந்த பின் மதியப்பொழுதுகள், வெயிலையும் நிசப்தங்களையும் கொண்டு தொடுக்கப்பட்டவை.  அதன் நிதானத்தை, சலனமற்ற மனங்களால் மின் விசிறியின் ஒலிக்கொண்டு அளக்க முடியும். அந்த மதிய பொழுதை யதார்த்தம் மாறாமல் கச்சிதமாய் கவிதைப்படுத்தியதோடு அதனுள்  சமூக சுரண்டலையும்  சேர்த்து முடித்தவிதம் அற்புதம்.

கிணறு இருந்திருந்த வீட்டில் வாழும் அல்லது வாழ்ந்த‌‌ மனிதர்களின் ஞாபகச்சாவி,  ‘தோட்டத்து கிணறு‘ என்னும் கவிதை. எங்கள் வீட்டின் பின்கட்டில் ஒரு கிணறு இருந்தது. ‘கிணற்றடி ஞாபகங்கள்’ என்று ஒரு கதையே எழுதும் அளவுக்கு அத்தனை நினைவுகள் உண்டு. சின்ன வயதில் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து, தெரியும் முகங்களில் எது நம்முடையது என அசைந்து பார்த்து ஊர்ஜிதப்படுத்திக்கொள்வது எங்களுக்குப் பிடித்த விளையாட்டு. “நல்லா பாரு.. நீ அப்படியா இருக்க? அது உன் நிழல் இல்லை. பிசாசு. ராத்திரி தான் வெளிய வரும். ராத்திரி வெளியே வந்து கிணத்துமேட்டில் உட்கார்ந்துக்கும். இந்த பக்கம் யாராவது வந்தா பிடிச்சு தின்னுடும்”  என்று கதைகட்டிய லட்சுமி அக்காவின் குரல் இன்னும் காதுக்குள் ஒலிக்கிறது. அந்த கதையை நம்பி கிணற்றடியில் மறந்த‌, என் மரப்பாச்சியைத் திரும்ப எடுத்து வரப் பயந்துகொண்டு அப்படியே விட்டதோடு இல்லாமல் என் மரப்பாச்சியைப் பிசாசு தின்றுவிடும் என்று நினைத்து  இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நாம் இழந்த அற்புதமான விஷயங்களில் ஒன்று கிணறு. வீட்டில் மற்றுமொரு நபராய் இருந்த கிணற்றுக்கும் நமக்குமான நெருக்கத்தை, அதன் இழப்பை இதயம் கனக்கச் சொல்லிச் செல்கிறது இக்கவிதை.

என்றோ ஒரு நாள் நதிக்கரையில் தான் தொலைத்த‌ காதலை நினைத்து இன்றும் அந்நதியோடு மருகும்  மனதின் தேடல் சொல்லும் ‘நதிக் கரையில் தொலைத்த காதல்‘ என்னும் கவிதை காதலின் ஆழம் பேசும்.

ஓராயிரம் காலத்துத் தனிமை பெருந்துயரை, காதலின் சில நொடி மௌனம் உணர்த்திவிடும். அந்த மௌன பேரலையில் தத்தளிக்கும் மனப்படகின் கையறுநிலை சொல்கிறது ‘மௌனத்தின் இருண்மை‘ கவிதை.

காதல் தான் மையக்கரு என்றாலும் அதன் வெவ்வேறு வலிகளை, நெஞ்சில் நிரம்பி  வழியும் நினைவுகளை, நறுமணமாக மாற்றி நம் அறை நிரப்பும் அந்த யுக்தியில் உணரமுடியும் சுரேஷ் பரதனின் கவித்திறமையை.  யுகம்யுகமாய் சலனமற்று வீற்றிருக்கும் மலைகளைக் கூட ரசிக்கத் தூண்டும் வார்த்தை வல்லமை இவருடையது.

காதல் தாண்டி அரசியலை, பெண்களின் வலிகளை, சக மனிதர்களின் நிலையாமையைப் பேசும் யதார்த்த கவிதைகள், மகரந்தம் தேடும் வண்டு போல் நம் மனதோடு ரீங்காரமிடும். குறிப்பாக வாழ்வியல் நிதர்சனம் பேசும் ‘ப்ரைவசி‘ கவிதை நம் மனசாட்சியைப் பிரதிபலிக்கும். இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது இரண்டு விஷயம் நிச்சயம் நிகழும். ஒன்று, இந்த புத்தகத்தின், முதல் கவிதையின், இரண்டாவது வரியை வாசிக்கத் தொடங்கும் போதே, வாசிக்க உகந்த ஒரு இடம் தேடி உட்கார்ந்துகொள்வீர்கள். இரண்டு, இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் பெருமூச்சுடன் கூடிய ஓர் குறுநகை வந்து முகத்தோடு ஒட்டிக்கொள்ளும்.

 

நூல் மதிப்பீட்டாளர் பற்றிய குறிப்பு:

சத்யா, வார்த்தைகளினால் வலிகளை வழியனுப்பி வைக்கும் கூட்டுப் பறவை. எந்த உதடுகளாலும் மொழியப்படாத மனித உணர்வுகளை புத்தகங்களில் தேடுபவள். சங்கீத பிரியை. இயற்கையின் சங்கேத மொழி அறிய முயற்சிபவள்.