சமீபத்தில் வெளியாகி பரவலாகப் பேசப்பட்ட பாலிவூட் திரைப்படம் Pink. வன்புணர்வில் தொடங்கி வடகிழக்கு மாநிலத்தவர் சந்திக்கும் இடையூறுகள் வரை பேசியது இந்த படம். ‘நோ மீன்ஸ் நோ’ என்ற ஒற்றை வாசகத்தில் ஒரு பெண்ணிற்கான தனிமனித உரிமயையை அழுத்தமாய் சொல்லியது. படத்தில் எனக்கு மிகவும் ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த கதையின் நாயகிகள் மூவரும் சாதாரணமானவர்கள்.
பெரும்நகரத்தில் வாழும் படித்த முற்போக்கு சிந்தனை நிரம்பிய பெண்களாக இருந்தாலும் இவர்களில் எவரும் சூப்பர் உமன் இல்லை.
பாலியல் துன்புறுத்தல், போலீஸ் அடாவடி, ஊழல் அதிகாரிகள், அரசியவாதிகள், கடமையை செய்யமுடியாத நியாயமான அதிகாரிகள் இப்படி எல்லாமே எதார்த்தமானவை.சட்டரீதியான சமூகரீதியான இந்த வகையான போராட்டங்கள் சில நேரங்களில் நமக்கும் சில நேரங்களில் நம்மை சார்ந்தவர்களுக்கும் நடந்திருக்கிறது.அதனால் தான் என்னவோ, சில காட்சிகளில் எவ்வளவு முயன்றும் கலங்காமல் இருக்கமுடியவில்லை. எனக்கு தோன்றியவரை எதார்த்தத்தில் இருந்து சிறிது விலகி சென்ற விஷயங்கள் என்றால் ஒன்று ஒரு தேர்ந்த வக்கீல் இலவசமாக உதவுவது மற்றொன்று நீதிபதி இத்தனை நல்லவராய் இருப்பது. தனது மகள் கைது செய்யப்பட்டும் அதிகமாய் பதறாது தோழிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று அமையதியாய் இருக்கும் தந்தை பாத்திரம், சாட்சியாகியிருக்க வேண்டிய வீட்டு ஓனர் கதாபாத்திரம் இப்படி சில விஷயங்கள் கதைக்களத்தில் கவனிக்கப்படவில்லை என்றாலும் சொல்ல வந்ததை சிறப்பாய் சொல்லிச் சென்றதால் நாமும் இவற்றை கவனியாது விட்டுவிடலாம்.
Pink வெளியாகிய அடுத்தவாரத்திலே வெளியாகி Pink படத்திற்கு எழுந்த கரவொலிகளுக்கும் பின் வந்த டோனி படத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் சிக்கி, சிறிதாய் அங்கீரகரிக்கப்பட்டு பின்பு மறக்கப்பட்ட படம் Parched. அடுத்தடுத்த வாரங்களில் வெளியானதாலும் இரண்டு படங்களும் மூன்று பெண்கள் சுற்றியே நகர்ந்ததாலும் இரண்டு படங்களையும் ஒப்பீடுசெய்யாமல் இருக்க முடியவில்லை. இப்படங்கள் இயக்கப்பட்ட விதம் குறித்தோ இல்லை இப்படங்களில் பயன்படுத்தபட்ட தொழில்நுட்பங்கள் பற்றியோ அல்ல இந்த ஒப்பீடு.இந்த படங்களின் நாயகிகள் அவர்கள் சொல்லும் கதைகள், அவை சொல்லப்பட்ட விதம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் படம் பார்க்கும் நம்மில் விட்டு செல்லும் உணர்வுகள் இவை குறித்த ஒப்பீடு.
படித்து பட்டம் பெற்ற மூன்று பெண்கள். சமூகம் நிர்ணயித்த கொடுங்கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தெறியும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்கள். தங்களுக்கான சரி தவறுகளை தாங்களே தீர்மானிக்க தெரிந்த பெண்கள். எனினும் இவர்கள் மின் காட்டிற்குள் வாழும் விட்டில் பூச்சிகள். நவநாகரீக உலகில் வாழ்ந்தாலும் இவர்கள் வாழ்க்கை ஒன்றும் எளிதானது அல்ல. விடியும் ஒவ்வொரு நாளும் ஒரு புது போராட்டமே. இவர்களின் போராட்டங்கள் வேறு வகையானதாய் இருக்கலாம், ஆனால் நிஜமானவையே. இந்த போராட்டங்களின் நடுவில் உடைந்து பின் உறுதிகொள்ளும் இவர்களில் நான் என்னை காண்கிறேன்.
மறுபக்கம் ஒரு கடைக்கோடி பாலைவன கிராமத்தில் தங்களின் தலையை சுற்றியிருக்கும் முக்காட்டு உலகத்தில் வாழும் பெண்கள். இருபதுகளில் கைவிடப்பட்டு பின்பு விதவையாகி கணவனைப் போலவே ஒரு கையாலாகாத மகனின் 34 வயது தாய் ஒரு பெண். குழந்தைபேறு இன்றி கணவனால் துன்புறுத்தப்படும் மற்றோரு பெண்.இவர்களுக்குத் தோழியாய், தனக்கு தெரிந்த அளவில் ஒரு புரட்சிப்பெண்ணாக ஒரு நடன அழகியும். இவர்களில் நான் என்னை காண்பதில்லை என்றாலும் இவர்களும் எனக்கு எங்கோ பரிட்சியமானவர்களே.
இந்த முக்காடிட்ட பெண்களின் எதார்த்தங்கள் நமக்கு விசித்திரமானவைகள். மணம் புகுந்த வீட்டில் கணவன் வேறு ஒரு துணையைத் தேடிக்கொள்ள மாமனார் மைத்துனர் இப்படி பலரும் சூறையாட அவள் குழந்தைக்கு யார் தகப்பன் என்று தெரியாத நிலையில் கருக்கலைப்பு செய்து தாய்வீடு திரும்பும் பெண்ணை உண்மை தெரிந்தும் காட்டாயமாய் புகுந்த வீட்டிற்கு அனுப்பும் ஒரு தாய்; வரதட்சணை தர இயலாத தன் காதலனை எப்படியாவது கைப்பிடிக்க வேண்டும் என்று அழகிய தனது கூந்தலை தியாகம் செய்யும் ஒரு இளம் பெண்; இவன் தன்னை சிறையிலிருந்து மீட்டெடுப்பான் என்ற கனவு கலைந்தபோது வலியை வைராக்கிய போர்வை கொண்டு மறைக்கும் ஒரு புரட்சி பெண்; கணவனோடு வீட்டிற்கு வந்த வேற்று பெண்ணொருத்தி பின்னாளில் தோழியாவதும், வருடங்கள் கழித்து அதே பெண்ணைத் தேடி இவள் மகன் செல்வதும் இந்த பெண்களின் எதார்த்தங்கள்.
போராட்டங்கள் ஒன்றும் இந்த பெண்களுக்கு புதிதல்ல. அதற்கான துணிவும் இவர்களிடம் குறைவல்ல. இருப்பினும் இவர்களின்போராட்டம் கடினமானது. ஏனெனில் இவர்களின் போராட்டங்கள் எல்லாம் இருமுனைப் போராட்டங்கள். ஒன்று இவர்களுக்கும் சமூகத்திற்குமானது, மற்றோன்று இவர்களுக்குள்ளேயே இவர்களை எதிர்த்து இவர்கள் புரியும் சுயபோராட்டம்.கணவனால் கைவிடப்பட்ட பின்பும் கணவனின் தாயை தன் தாய் போல பாவித்து பேணும் ஒரு பெண் , ஒடுக்குமுறைகளுக்கு நடுவே வளர்ந்தாலும் மருமகளை மகளாய் பாவித்து தன் மகனிடம் இருந்து அவள் வாழ்க்கையை காப்பாற்றும் ஒரு பெண், குழந்தை பேறு என்பது தனது தனிப்பட்ட உரிமை என்பதை பெரும் வசனங்கள் துணையின்றி ஒற்றைவரியில் உரைக்க வைக்கும் ஒரு பெண், உனக்கானவன் உன்னை கொண்டாடுபவனாய் இருக்கவேண்டும் என்று புரட்சி பேசும் ஒரு பெண் இப்படி இவர்களின் ஒவ்வொரு பொழுதும் ஒரு உணர்ச்சி போராட்டமே.
இவர்களில் நான் என்னை காணவில்லை என்றாலும் இந்த போராட்டங்களில் இவர்கள் வெற்றி பெரும் போது நானே வென்றது போன்றோரு இன்பம் வந்து நிறைகிறது.போராட்டங்களின் முடிவில் அடக்கு முறைகளை தகர்த்தெறிந்து தனக்கான சரி தவறுகளை தாங்களே நிர்ணயிக்க இவர்கள் பயணப்படும் போதும் மனம் பெரிதாய் வேண்டிகொள்கிறது – இவர்களும் மின் காட்டிற்கு இடம் பெயரும் விட்டில் பூச்சிகளாகிவிட கூடாது என்று.
Here is the English version of the article
Image Source : The Indian Express ; The Quint.